நாகர்கோவில் எக்ஸ்ப்ரெஸும் நாடகக் கம்பெனியும்

ஒரு கிராமத்தில் அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் பிறந்துவளர்ந்தவரில்லை என்றால், மேடை நாடகம் மற்றும் தெருக்கூத்து போன்ற பொக்கிஷங்களை அனுபவித்திருக்க மாட்டீர்கள். விடிய விடிய ஆடிப்பாடி மரபுக்கதைகளை உயிரோட்டத்தோடு வர்ணிக்கும் இந்தக் கலை வடிவங்கள் இப்போது அருகிவிட்டன.
நம் மண்ணுக்கு வந்த புதிய சமய மரபுகளையெல்லாம் அரவணைத்துக்கொண்டு இந்தப் பழங்கலைகள் நிமிர்ந்து நின்ற காலம் இருந்தது. எங்கள் ஊரில் (தேவகோட்டை அருகில் ஆண்டாவூரனி) மாரியம்மன் திருவிழாவிற்கு வள்ளிதிருமணமும், மாதா கோவில் திருவிழாவிற்கு ஞானசௌந்தாரி நாடகமும் வருடாந்திர நிகழ்வுகள். ('இந்த வள்ளிக்கு ஏன் வருடாவருடம் திருமணம் செய்து வைக்கிறார்கள்? ஞானசௌந்தரிக்கு கல்யாணமே கிடையாதா?' என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்போம்). இரண்டடையும் பெரும்பாலும் அதே நாடகக் குழுவினர் நிகழ்த்துவார்கள். புதுக்கோட்டை/மதுரை பக்கம் இருந்து வருவார்கள். வள்ளிதிருமணத்தில் "மாரியைப் பொழிபவள் மாரியம்மா" என்று திறவு பாடல் (opening song) இசைக்கும் ஆர்மோனியக்காரர், மாதாகோவில் நாடகத்தில் அதையே "மேரியைத் தொழுபவள் மேரியம்மா" என்று இறக்கி பரவசப்படுத்துவார். பாட்டும் நடிப்பும் பட்டையைக் கிளப்பும்.
இந்தவாரம் சென்னை-அலையன்ஸ் ஃப்ராங்கைஸ்-க்கு வாங்க.
கூத்துப்பட்டறையில் பயின்ற நடிகை, எழுத்தாளர், இயக்குனர் வினோதினி வைத்தியநாதன் இந்த அருகிவரும் கலைவடிவங்களை உங்கள்முன் பொலிவோடு நிறுத்துகிறார். நவீன நாடகத்தின் தந்தை பம்மல் சம்பந்த முதலியாரின் 'ஓர் ஒத்திகை'யை தழுவி 'நாடகக்கம்பெனி' என்ற நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார். கூடுதல் காட்சிகளையும், தெருக்கூத்து அம்சங்களையும் இணைத்து, ஒரு புதிய கலானுபவத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார்.
மரபுகளைக் கொண்டாடுவதிலும், அதேசமயம், சமூகப்பாசாங்குகளை உடைப்பதிலும் சம கவனம் செலுத்தியிருப்பதை கைதட்டி வரவேற்கலாம். தமிழும் நகைச்சுவையும் ஒரு நல்ல வாழை இலைவிருந்தின் நிம்மதியைத் தரும். முதலில் வரும் 'நாகர்கோவில் எக்ஸ்ப்ரெஸ்' நாடகம் பொருத்தமான பசிகூட்டியாக (appetizer) அமையும்! வாங்க மக்கா வாங்க! நாடகம் பாக்க வாங்க!
#NENC 

Comments

Popular Posts