வெயில் பயணங்கள்
(மே 14, 2016, சென்னையிலிருந்து முசிறி பயணத்தில் எழுதியது)
திருச்சி பக்கத்தில் முசிறிக்குப் போய் மாமியார் வீட்டிலிருந்து மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வர வேண்டும். (எல்லாம் கோடை விடுமுறைக்குப்போயிருக்காங்க. வேற ஒண்ணுமில்லை). இரண்டு நாட்களாக இரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை. (தேர்தலை மக்கள் சீரியஸாகத்தான் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். நல்லதுதான். இல்ல, இந்தப் பாழாப்போன பணம் பாடாய்ப்படுத்துகிறதா, தெரியவில்லை). இரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் பிதுங்கி வழிகிறது. இரவு ஏ.சி. பஸ் கட்டணம் விமானக்கட்டணத்தைப்போல் ஏற்றிவிட்டார்கள். விமானக்கட்டணமும் இந்த இரண்டு நாட்களில் ராக்கெட் ஏறிவிட்டது. (முக்கிய நாட்களில் விலையை ஏற்றுவது தர்மமா, மஹா ஜனங்களே?)
சரி கூட்டமெல்லாம் குறையட்டும். சனிக்கிழமை காலை பகல் பயணமாகப் போகலாம் என்று முடிவெடுத்தேன். "ஏ.சி. வண்டியா எடு. . இல்லே, வெயில்ல, அப்டியே வெந்துபோயிடுவேப்பா" என்றார்கள். "அட என்னங்க. நம்ம நாட்டுல இப்ப கால்வாசிப்பேர் பஞ்சத்தில குடிக்க தண்ணி இல்லாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்களாம். ஒரு நாள் பஸ்ல ஏசி இல்லாம போன என்னங்க" என்று பதில் தந்தேன்.. இதுகூட செய்யாம நம்மல்லாம், யோகா, சுற்றுச்சூழல்னு எப்பிடி பேச முடியும், என்று எண்ணினேன். தவிர, என்னை மாதிரி கிராமத்தில் வளர்ந்தவர்கள் சிறுவயதில் வெயிலில் வெயிலோடு வெயிலுக்காகவே பிறந்தவர்கள் போல் அலைவோம். களத்தில் கிட்டிக்கம்பு விளையாடும்போது எங்க அம்மா சொல்வாங்க "வெயில வீணாக்காம நின்னு வேல பாக்குறீங்களோப்பா! (தொடர்ந்து சில மென் வசை மொழிகள் சன்னமான குரலில் ஒலிக்கும்)". இப்போது கிராமங்களில் கிட்டிக்கம்புக்குப் பதில், கிட்டத்தட்ட அதே ஆட்டவிதிகள் கொண்ட கிரிக்கெட் மட்டுமே விளையாடுகிறார்கள். மட்டை பந்து எல்லாம் செலவு அயிட்டங்கள். கிட்டிக்கம்புக்கு, நாமே தோட்டப்பக்கம் போய் செதுக்கிக்கொள்ளலாம். சரி அத விடுங்க!
தாம்பரத்தில் நின்றபோது, முதலில் வந்தது அரசுப்பேருந்து. ஏ.சி. இல்லை. ஏறி அமர்ந்தேன். பால்ய வயதில் ஊரிலிருந்து தேவகோட்டை போய், பிறகு அங்கிருந்து மதுரைக்கும் திருச்சிக்கும் போகிற நெடிய பயணங்கள் நினைவிலாடின. எப்பேர்ப்பட்ட வெயிலயும் ஊருக்குப் போகிறோம் என்கிற குதூகலம் தனித்துவிடும். காரைக்குடி, புதுக்கோட்டையில் பஸ் நிக்கும்போது அப்பா இறங்கிப்போய் சர்பத் வாங்கித் தருவார். இப்போது சர்பத் அருகி விட்டது. இப்போது கோக் பெப்ஸி போன்ற கருமாந்திரங்களைத் தான் வெயிலில் அடுக்கி வைத்து காயவிட்டு, பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து நம்மை குடிக்க வைத்து சாவடிக்கிறார்கள்.
யோகா வகுப்பில் முதுகை வளைக்காமல் நேர ஒக்கார சொல்லி நினைவூட்டிக்கொண்டே இருப்போம். முதுகு நிமிர்ந்து இருந்தாலே போதும். உறுப்புக்கள் உற்சாகமாக இயங்கும். உடல் நலம் சிறக்கும் என்பது உண்மை. அரசுப்பேருந்துகளின் இருக்கைகள் இந்த யோக சூத்திரத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. நீங்கள் நிமிர்ந்து மட்டுமே உட்கார முடியும். கொஞ்சம் வளைந்தால் முட்டி இடித்து திரும்ப நிமிர்ந்துவிடுவீர்கள்.
இப்போது உலகத்தரமான விரைவுச்சாலைகள் வந்துவிட்டன. "திருச்சி டூ தாம்பரம் த்ரீ ஹவர்ஸ்ல அடிச்சோம் மச்சான்" என்று மாப்பிள்ளைகள் மார்தட்டுவார்கள். (தாம்பரம் டூ திருவான்மியூர் இன்னோரு த்ரீ ஹவர்ஸ். அத விடுங்க). அரசுப்பேருந்துகளும் சளைக்காமல் குட்டியானை மற்றும் சக ரக வாகனங்களோடு போட்டி போட்டுக்கொண்டு பறக்கின்றன. ஒன்னும் கொறையே சொல்லமுடியாது.
"இந்த விரைவுச்சாலைகள் வந்தபின் ஊருக்குப்போற மாதிரியே இல்லப்பா. ஊரு ஊராப் போயி வந்தாதான் என்னா ஏதுன்னு தெரியும். இப்ப எங்க வாரோம்னே தெரிய மாட்டேங்குது" என்று காரில் போகும்போது அண்ணன்மார்கள் இதர பெரிசுகள் கமெண்டு கொடுப்பார்கள். அரசுப்பேருந்துல போனா அந்தப் பிரச்சனை இல்லைங்கண்ணா. ஒவ்வொரு ஊருக்குள்ளும் போய் சுற்றம் நட்பெல்லாம் பார்த்துவிட்டுத்தான் மீண்டு வருவீர்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அரைமணி ஆகிவிடும். திருப்திதானே!
அமெரிக்காவில் இருக்கும்போது, 'இங்கே எல்லா ஊரும் நகல் எடுத்தாமாதிரி ஒரே இருக்கு' என்று குறைபட்டுக்கொள்வோம். ஒரு கேரக்டரே இல்லாமல், எந்த ஊருக்குள்ளே போனாலும் அதே குப்பை உணவக தொடர்மையங்கள் (Junk Food restaurant chains), அதே காபிக்கடைகள், அதே உயர்சுவை உணவகங்கள் (fine dining restaurants) செட்டுப்போட்ட மாதிரியே வைத்திருப்பார்கள். நம்ம ஊருக்குபோனால, ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மாதிரி, என்று பேசிக்கொள்வோம். கடந்த 10-20 ஆண்டுகளில் இந்த எண்ணம் தவறாகிப்போய்விட்டது. எந்த ஊருக்குள் போனாலும், பொட்டிக்கடைகளில் அதே நாசமாப் போன பெரிய கம்பெனிகளின் பாக்கெட் இனிப்புகள், சிப்ஸ் நுறுக்கு தீனி பாக்கெட்டுகள், கம்பெனி குளிர் பானங்கங்கள், டாஸ்மாக்குகள், பக்கத்திலேயே சில்லி சிக்கன் பரோட்டா கடை, ரியல் எஸ்டேட் மற்றும் தேர்தல் விளம்பரங்கள் என்று எங்கு பார்த்தாலும் அழிவு ஆட்டம்போட்டுக்கொண்டிருக்கிறது.
பேருந்து நான்கு ஐந்து முறை சுங்க சாவடிகளில் நிற்கும். அந்த சில நிமிடங்களில், நிழலில் வெப்பக்காற்றும் கொஞ்சம் காட்டம் குறைந்து அடிக்கிறது. அந்தந்த கிராமத்தார், வெள்ளரிக்காய், நொங்கு, பலாச்சுளைகள், மாங்காய்கள் விற்கிறார்கள். கண்டகண்ட கோக்கு மாக்கெல்லாம் குடிக்காமல் இத வாங்கிசாப்பிடுங்க மக்கா. அப்புறம் இன்னோன்னு. வெயில்ல நின்னு விக்குறாங்க. பேரம் பேசாம வாங்கிக்கங்க. சொன்னா கேளுங்க.
கடின நீண்ட பயணங்களை இனிதாக்குவதற்கு இசை மாதிரி வேறு ஒன்றுமே கிடையாது. முரட்டு மீசை வச்ச ராஜ்கிரண் மாதிரி பெருசுகள்கூட, பஸ்சில் போகும்போது 'என் தாயெனும் கோயில காக்க மறந்திட்ட பாவியடி கிளியே' என்ற பாட்டில் கரைந்து கண்ணீர் கசியவிடுவதை கவனித்திருக்கிறேன். ஊர் தனியார் பஸ்சுகளில் இப்போது அதையும் காலி பண்ணி வீடியோ ஆக்கிவிட்டார்கள். வெளியே பார்த்துக்கொண்டே செவிச்செல்வம் அனுபவிக்கிற சுகத்தை திரும்ப கொடுங்கள் அன்பர்களே! படம் ஓடிக்கொண்டிருந்தால், பார்க்கவும் முடியவில்லை (தலைவலி), பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை (சத்தம் படுத்துகிறது). இந்த அரசுப்பேருந்தில் அந்த தொந்தரவு இல்லை. டிரைவர் தன் சொந்த செலவில் மலிவான ஒரு ஆடியோ சிஸ்டம் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். முன்புற நான்கு வரிசைகளுக்கு மட்டுமே அது கேட்கும். அந்த ஒலிபெருக்கியில் கீழ்ஸ்தாயை அதிருவுகள் (bass) சுத்தமாக இல்லை. சிக் சிக் சிக்கென்று தாம்பரின் (Taumbrine) ஓசை குரல்களைத்தாண்டி ஒலித்துக்கொண்டிருந்தது. (ரொம்ப முக்கியம்!). இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்ற தோரணையில் சிறிசுகள் எல்லோருமே கையில் செல்ஃபோனும் காதில் ஹெட்ஃபோனுமாக தங்களின் உலகங்களில் மூழ்கிவிட்டார்கள். எனக்கு அருகில் ஐபாட் கருவியில் ஐ.டி. இளைஞர்கள் இருவர் தெறி படம் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அருகில், ஒரு இளம் காதல் ஜோடி வழி நெடுக கெக்கெ பிக்கே சத்தம் போட்டுக்கொண்டே வந்தார்கள்.
ஓட்டுநர் பழைய்ய்ய்ய்ய பாடல்கள் போட்டுக்கொண்டு வந்தார். எனக்கு அப்படிப்பாடல்கள் அதிகம் பிடிக்கும். ஆனால் அன்றைக்கு ஒலித்த பாடல்கள் ஒன்றும் கேட்ட மாதிரியே இல்லை. என்ன மாதிரி ஒரு தேர்வோ. 'என்றும் இனியவை' மாதிரி 'ஏன் இந்தப் பாட்டெல்லாம் கேக்கவே மாட்றீங்க?' என்ற பெயரில் ஒரு கலக்ஷனாக இருக்குமோ?
ஆனால் திடீரென்று, சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல் 'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி' பாடல் ஒலித்தது. இந்தப் பாடலை இப்போதுதான் ஊன்றிக்கேட்கிறேன். அப்ப்ப்பா, என்ன ஒரு படைப்பு!. உடனே இணையத்திலிருந்து இறக்கி கைபேசியில் திரும்ப திரும்ப ஒலிக்கவிட்டேன். பயணம் போய் வந்ததிலிருந்து இந்தப்பாடல்தான் சிந்தையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இசையும் கண்ணதாசனின் வரிகளும் சுசிலாவின் குரலும் உன்னத அனுபவத்தை தருகின்றன. பல்லவியை இரண்டாம் முறை பாடும்போதே 'சிவகாமி' யையும், 'சொல்லடி' யையும் சுசீலா சுழற்றி அடிக்கும் விதம் அபாரம். அதற்கு நீங்கள் விழாமல் இருக்கவே முடியாது. 'அன்று நிழலாடும் விழியோடு ஆடினானடி'யில் முருகன் ஆடுவதுபோல் நீங்கள் ஆடுவீர்கள். முதல் சரணம் முடியும் வரை சுசீலாவின் ஆட்சிதான். அதற்குப்பின் டி.எம்.எஸ் வந்ததும் பாடல் டல்லடிக்கிறது. 'ஓஹோ' என்று சம்பந்தமில்லாமல் பாடி நல்லா போய்க்கொண்டிருக்கிற பாடலுக்கு 'இண்டர்வெல்' விட்டுவிடுகிறார். அப்புறம் திரும்ப சுசீலா வந்து இழுத்துப்பிடிப்பதற்குள் பாடல் முடிந்துவிடுகிறது. இருந்தாலும் கண்டிப்பாக இந்தப் பாடலைக் கேளுங்கள். https://www.youtube.com/watch?v=XGoZnhfXmHg. (ஆடியோவை மட்டும் தனியே கேளுங்கள். இல்லாவிடில், கே.ஆர்.விஜயாவின் லீலைகள் இன்னோரு பரிமாணத்திற்கு இழுத்துச்சென்றுவிடும்)
அனல்காற்று அள்ளிவீசிக்கொண்டிருக்கிறது. கண்ணுக்கெட்டியதூரம் வரை பசுமை இல்லை. கிட்டத்தட்ட Mad Max Fury படத்தில் வருவது நாடே பொட்டக்காடாகிவிட்டது. இடைவெளி விடாமல் ரோட்டோரம் வரிசையாக பிளாட்டுகள் போட்டு பெரிய வளைவுகள் கட்டி வியாபரம் நடக்கிறது. ஏன் எசமான், அவ்வளவு பெரிய வளைவு கட்டின நேரம், செலவு மற்றும் தண்ணீரை வைத்து மரங்களை நட்டிருக்கலாங்களே!
ஒருவகையில் இந்த அனல்காற்று ஏ.சி.யைவிட தேவலாம். கே.பி.என். போன்ற கம்பெனி பேருந்துகளில் ஏ.சி.யால் பிரச்சனைதான். ஏறி அமர்ந்தவுடன் ஏ.சி.ய நல்லா போடுங்கப்பா என்று சொல்வோம், ஆனா ஒன்றும் வராது. ஊர் மாப்பிள்ளைங்க உடனே எழுந்து உரிமைக்குப் போராடுவார்கள். 'ஏங்க காசு வாங்குறீங்க! ஏ.சி.ய சரிபண்ண மாட்டீங்களா? காத்தே சுத்தற வல்லங்க. காசு ரீஃபண்ட் பண்ணுங்க' என்று அந்த ஒண்டிக்கட்டை ராணுவ (one man army) டிரைவரிடம் சண்டை போடுவார்கள். ஒரு சில மணிநேரங்களில் ஏ.சி. நல்லா சுறுசுறுப்படைந்து தன் வேலயைக் காட்டு காட்டுன்னு காட்டும். குளிர் போட்டுத்தாக்கும். தமிழன் வெயில் தாங்கிவிடுவான். ஆனால் குளிர் தாங்கவே மாட்டான். அதுதான் உண்மை. மாப்பிள்ளைகள் வெட்கத்தைவிட்டு மெதுவாக எழுந்துபோய் டிரைவரிடம் 'அண்ணே, கொஞ்சம் ஏ.சி.யைக் கம்மி பண்ணினா நல்லா இருக்கும்ணே" என்று அடிபணிவார்கள். டிரைவரோ 'கொறைக்கெல்லாம் முடியாதுப்பா. ஆஃப் வேணா பண்ணலாம்' என்று ஒரு சூப்பர் ஆப்பு வைப்பார். அவரோட மனக்குரல் (mind voice) இப்படி ஒலிக்கும் "ஏ.சி. ஏ.சி.ன்னு சத்தம் போட்டீங்கல்லடீ. இப்ப சாவுங்க!"
நெடிய பயணங்களில் வண்டி இடைவேளைக்கு நிற்கும்போது நடக்கும் விஷயங்கள் வாழ்க்கையின் சூட்சமங்களை விளக்குபவை. குறிப்பாக கே.பி.என். போன்ற கம்பெனி பேருந்துகளின் இரவுப்பயண நிறுத்தங்கள் பயங்கரமானவை. எல்லா கே.பி.என் பேருந்துகளும் குறிப்பிட்ட இடங்களில்தான் நிற்கும். அந்த குறிப்பிட்ட உணவகத்திற்கும் பேருந்து நிறுவனத்திற்குமான ஒப்பந்தமாக இருக்கக்கூடும். 'வண்டி 15 நிமிஷம் நிக்கும் சார். டிபன் சாப்பிடுறவுங்க சாப்பிடுங்க' என்ற அலறலில் அனைவரும் விழித்துக்கொள்வர். அதிலும் தப்பித்தூங்குபவர்கள் சில நிமிடங்களிலேயே யூரின் நெடியில் துடித்து எழுவார்கள். விமானக்கட்டணத்திற்கிணையான கட்டணத்தில் VOLVOவின் புதுராக வாகனங்கள் எல்லாம் வைத்திருக்க முடியும்; ஆனால், அந்த உணவகத்தோடு நல்ல ஒப்பந்தம் போட்டு கழிப்பறைகளை சுத்தமாக வைக்க முடியாதா திரு.கே.பி.என் அவர்களே? வெளியே போனாலே கழிப்பறை இருக்காது, அப்படி இருந்தாலும் அது கடுமையான கொடுமையான கக்கூஸ்களாக இருக்கும், என்ற நம்நாட்டு சாபம் எப்போது நீங்குமோ?
இரவு 2 மணிக்கு வண்டி நிற்கும்போது, ஒரே கம்பெனி வண்டிகள், ஒரே வண்ணத்தில் ஒன்றுகூடி மொய்த்துக்கொண்டிருக்கும். அடையாளத்திற்கு வண்டி பதிவு எண்ணில் கடைசி நான்கு எண்களை மட்டும் பார்த்துவிட்டு போனால் அழிந்தீர்கள். ஏனென்றால், எல்லா வண்டிகளுக்கும் அதே நான்கு எண்கள்தான். முதல் நான்கு இலக்கத்தில் உள்ள பதிவுமையத்திற்கான எண் மட்டுமே மாறுபாடும். 'ஓனர் ஐயா, ஏன்யா ஏன்யா? எதுக்காக இப்டில்லாம் பண்றீங்க' என்று அழத்தோணும்.கழிப்பறை போய் கியூவில் நின்று போய் வருவதற்குள் கொஞ்சம் தாமதமாகி விட்டால், உங்கள் பேருந்து 'மூவ் பண்ணி முன்னாடி' போய்விடும். அந்த அகால நேரத்தில் உங்கள் பேருந்தை மறுபடி கண்டுபிடித்து ஏறுவது இன்னொரு கட்டுரைக்கான அனுபவங்களை விட்டுச்செல்லும்.
அந்த 2 மணி வேளையிலும் சுருக்குன்னு தேநீர் குடிப்பவர்கள் உண்டு. அப்பதான் திரும்ப தூங்க வசதியாக இருக்குமோ? 'இங்க கொத்துபரோட்ட்டா செம கெத்தா இருக்கும் பாஸ்' என்று அந்த நேரத்திலும் ஒரு கட்டு கட்டும் நண்பர்கள் உண்டு. இதெல்லாம் நல்லாருக்கா? இந்த பரோட்டாவையே (மைதா) ஒழிச்சிக்கட்டணும் பாஸ். கொத்துப்பரோட்டாவுக்கு கல்லில் நடக்கும் 'டங்கு டக்கர' அடியெல்லாம் நமது சாவுக்கு அடிக்க நடக்கும் ஒத்திகை, பாஸ்! (மைதா பரோட்டாவின் தீமைகளை இணையத்தில படிக்கவும்). இந்த இடைவேளையில் ஒருதம் கட்டி விட்டு நுரையீரல்களை இரண்டாவது கட்டப் பயணத்திற்கு தயார் செய்துகொள்பவர்களும் உண்டு.
இன்று மதியம் அரசுப்பேருந்து கேட்பாரற்ற ஒரு உணவகத்தில் வந்து நிலை கொண்டிருக்கிறது. இந்த விரைவுச்சாலையில் எத்தனையோ உணவகங்கள் இருக்கின்றன. எல்லாத்தையும் விட்டுட்டு இந்த இடத்தை எப்படி ஓட்டுனர் தேர்வுசெய்தார் என்பது ஒரு புதிர். சாப்பாடும், சிக்கன் பிரியாணியும் மெனுவில் இருந்தன. இந்த வேகும் வெயிலில் மேலும் சூட்டைக்கெளப்பி, விரைவில் சீட்டைக்கிழிக்கும் ப்ராய்லர் கோழிகளை சாப்பிட்டு ஆகவேண்டுமா, தோழர்களே! சிந்திப்பீர்.
பேருந்திலிருந்த சிலரே உணவருந்த உணவகம் நுழைந்தார்கள். சாப்பாடு பரவாயில்லை. சாப்பிடுபவர்கள் எல்லாருமே ஒரு கண் சாப்பாட்டிலும் இன்னோரு கண் முதல் மேசையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மேல் வைத்திருந்தார்கள். கே.பி.என். பேருந்தில் இரவுப்பயண முன் அனுபவமாக இருக்கக்கூடும். ஓட்டுனர் நம்ம கண்ணுலே இருக்குறது நல்லதுதான். தவிர, இது அரசுப்பேருந்து. விட்டுட்டு போயிட்டா, ஃபோன் பண்ணி சண்டைபோடக்கூட வசதி இல்லை.
ஐந்து மணிநேர Mad Max Fury பயணத்திற்குப்பின், சேலம் ரோடு பிரியும் டோல்கேட்டில் இறங்கி முசிறிக்கு பேருந்தில் ஏறினேன். காவிரியின் வடகரையை ஒட்டியே பேருந்து பயணிக்கும். காவிரி வறண்டு சோர்ந்துபோய் விட்டாலும், கரைகளெல்லாம் பசுமைதான். தண்ணி இல்லேன்னாலும் காவிரி காவிரிதானே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு "நடந்தாய் வாழி காவேரி!" என்று சிலப்பதிகாரத்தில் பாடியிருகிறார்கள். (அதே மொழி, இப்போதும், நடப்பில் இருக்கு பாருங்க. அதாங்க தமிழ்!) மணல் லாரிகள் அல்லும் பகலும் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அகழ்வாரைத்தாங்கும் நிலமாய் காவிரித்தாய் பொறுமை காக்கிறாள். மணல் சிக்கனம் அவசியம், மக்களே! தேவைக்கதிகமாய் எதைச்செய்தாலும் அது எங்கோ யாரையோ எதையோ சுரண்டுகிறது தானே! இருக்கும் மக்கள்தொகையில் அடிப்படைத் தேவைக்கே ததிங்கிணத்தோம் ஆடவேண்டியுள்ளது.
பசுமைதாங்கிய காவிரிக் கரைப்பயணத்தின் முத்தாய்ப்பாய் முசிறியில் இறங்கி, மாமியார் வீட்டில் நல்ல கவனிப்போடு இந்தக் கட்டுரையை எழுதி முடித்தாயிற்று. என்ன ஆனாலும் மருமகன்களை அன்போடும் மதிப்போடும் நடத்தி மனம்குளிர வைக்கும் இந்த தமிழ்ப் பண்பாடு என்றும் நிலைக்கட்டும்! பயணங்கள் இனிக்கட்டும்!
Comments
Though i can never manage to express well in Tamil, enjoyed reading urs Alex. Laughed out loud in a lot of places. Straight from the heart post man!! Keep them coming....
P.S typed my whole comment in tamil the first time and lost it in the web world. Hence the half n half.
Sorry boss!
கோக், மைதா காக்கூசு எல்லாம் வளைத்து காவிரியை ( கவிரியும் தமிழும் இரட்டை சகோதரிகளாக இருக்கக்கூடும்) பற்றிய பதிவுகளின் போது கொவம், கவலை கலந்த உணர்வை தவிர்க்க முடியவில்லை... மொத்தத்தில் ஒரு அருமையான பயணம், நமது ஊரின் மண்வாசனை இரண்டையும் நினைவூட்டினீர்கள்.
உங்கள் இப்பணி தொடர வாழ்த்துக்கள்.
"கார்பன் கால்பதிவு" என்பதை சொல்லாக்கப்படும் முன்னமே, அலெக்ஸ் காரில் ஏ/ஸி போடமாட்டார் என்பது சன்னிவேல் பக்க பொது அறிவு :)
நம் சிற்றூர்களின் தனித்துவங்களை கோக் பெப்சி பாட்டிலில் வழியும் நுரையில் தொலைத்துக் கொண்டிருப்பதை கோடிடும் குமுறல்.. காவிரியைக் கண்டவுடன் இளகி, நரைத்தாலும் என் தமிழ்.. நலிந்தாலும் என் நதி..என குழந்தைத் தனமான குதூகலமாய் மாறுவது. :) Quintessential Alex.
பாறை பையன் (Rock on :))
அப்புடியே நம்ம ஹாஸ்டல் Life பத்தி நாலு வரி சோக்கா எழுதுப்பு ( காலைல 4 மணிக்கெல்லாம் கஷ்டப்பட்டு எந்திருச்சு பூஜைல போய் தூங்குவுவமே) சந்தோசமா படிப்போம்ல. அப்புறம் அப்புடியே தாத்தா கட்டுரையை இன்னோரு தடவை படிச்சேன். பழைய ஞாபகமெல்லாம் வந்து போச்சு. நிறைய எழுது பாபு! வாழ்த்துக்கள்!!!