வந்திட்டேன்னு சொல்லு

வந்திட்டேன்னு சொல்லு
ஒரு ஸ்டாண்டப் காமெடியனின் கதை


"வந்திட்டேன்னு சொல்லு. திரும்பி வந்திட்டேன்னு சொல்லு" என்ற கபாலி வசனத்தை கடந்த சில மாதங்களாக நானே எனக்கு சொல்லிக்கொள்கிறேன்.
"14 வருஷத்துக்கு முன்னாடி  ஸான் பிரான்சிஸ்கோவில இருந்து எப்டி போனேனோ, அது மாதிரி சாப்ட்வேர் எஞ்சினியரா இல்லே!  வேறே! வேறே மாதிரி!  ஆர்ட்டிஸ்ட்டா!.. காமெடியனா!... ஸ்டாண்டப் காமெடியனா திரும்பி வந்திட்டேன்னு சொல்லு!" என்ற கபாலியின் பெருமிதக்குரல் அப்டியே பொருந்தி ஒலிப்பதுபோல் ஒரு மயக்கம்.

வட அமெரிக்காவின் தமிழ் கூறும் நல்லோருக்கு என் வணக்கங்கள். இது ஒரு சுயவிளம்பரக்கட்டுரை என்பது மேல் பத்தியிலேயே தெரிந்திருக்கும். ஆனால் இந்தக்கதையில், வட அமெரிக்காவில் வாழும் தமிழர் என்ற முறையில் இது உங்கள் கதையாக இருக்கக்கூடும் அல்லது இந்த கதையில் நீங்கள் ஒரு பெரும் பங்கு வகிப்பவர்கள். ஆகவே, அந்தப்பொறுப்போடு கடைசிவரை கட்டுரையைப் படிக்கவும்.

தொண்ணூறுகளின் இரண்டாம் பாகம், அமெரிக்காவில் டாட் காம் முட்டை (dot com bubble) ஊதிப்பெருத்து எல்லாரையும் உள்ளே இழுத்துக்கொண்டிருந்த காலம். அமெரிக்காவில் மேற்படிப்புக்கும் அது பொற்காலம். என்னை மாதிரி அரை மனசோடு எதற்கு மேல படிக்கிறோம் என்று தெரியாமலேயே விண்ணப்பித்தவர்களையும்கூட அமெரிக்கா 'வாங்கடே வந்து படிங்கடே' என்று பொருளுதவி நீட்டி அணைத்துக்கொண்டிருந்தது. எல்லாரும் பண்றாங்க என்ற ஒரே காரணத்திற்காக பொறியியல் சேர்ந்து, அதே காரணத்திற்காக அமெரிக்காவே போய் இறங்கியாயிற்று.  ஆனால், அமெரிக்காவின் பகட்டும் சௌகர்யங்களும் எந்தக்கிளர்ச்சியையும் எனக்கு ஏற்படுத்திவிடவில்லை. மாறாக அந்த எந்திரத்தன்மையும், பரிட்சயமற்ற சூழலும்  கடுமையான் சோர்வையே ஏற்படுத்தின. ஊரிலிருந்து சூட்கேஸ் நிறைய அள்ளிக்கொண்டு வந்த இளையராஜா கேசட்டுகளின் துணைகொண்டே அந்த நாட்களை நகர்த்தினேன்.

1999. சிலிகான் வாலியில் வேலை. டாட்காம் மப்பும் மந்தாரமாகி எந்தக்கணமும் முட்டைவெடிக்கும் என்று கோமளவிலாஸிலும், தாபாவிலும் கூடும் மக்கள் ஆருடம் சொல்லிகொண்டிருந்தார்கள். ஆனால், அதைப்பற்றிய புரிதலோ கவலையோ இன்றி, தமிழ் மன்றம், நாடக் குழு, லோட்ட்ஸ் அமைப்பு, சான் ரேமன் அலி அக்பர் இசைக் கல்லூரியில் தபேலா இசை வகுப்பு என்று கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கவ்விக்கொண்டு பல தளங்களில் பிஸியாக அலைந்துகொண்டிருந்தேன். கலையார்வம் கொண்டோருக்கு, சிலிகான் வாலி ஒரு சொர்க்க பூமி. நண்பர்களோடு தில்லானா இசைக்குழு தொடங்கினோம். கர்னாடக இசை அறிமுகம் கிட்டியது. யோகாவகுப்புகள் கிடைக்கபெற்றன.  இசையும், கலையும், தமிழுமாய் கழிந்த நாட்கள் அவை. சாப்ட்வேர் வேலையில் பெரிய நாட்டமோ நேர்த்தியோ இல்லாத அந்த நிலையில், பலரும் எதிர்பார்த்தபடி டாட்காம் முட்டை ஒரு நாள் உடைந்து நொறுங்கியது. பங்குச்சந்தை வீழ்ந்தது. அது நடக்கும் என்று ஆருடம் சொன்னவர்கள் கூட நடந்தபின் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது இன்னும் ஆச்சர்யமாகவே உள்ளது. அதைவிட பெரிய ஆச்சர்யம்,  சிலிகான் வாலியில் திக்கெட்டும் நடந்த அந்த வேலை குறைப்பில் என் தலை மட்டும் எப்படி ஐந்து ஆண்டுகள் தப்பிப்பிழைத்தது என்பது. (தெய்வம்னு ஒண்ணு இருக்கு, குமாரு :-)).

வேலை ஒருபக்கம் இருக்க, கலைப்பயணம் முழுமூச்சாக தொடர்ந்தது. நான் உடனே சென்னைக்கு சென்று கலை உலகில் கால் பதித்து, தமிழ் சினிமாவின் அடுத்த விவேக்காகிவிட வேண்டும் என்று என் நண்பர்கள் ஒரு பார்ட்டியில் முன்மொழிய, நானும் வழிமொழிந்து உறுதி பூண்டேன். அந்த சமயத்தில்தான், ஒரு பெரிய மாற்றம் நடந்தது.  (கட்டுரையை இங்கே ஒரு 2 நிமிஷம் நிறுத்து விட்டு சஸ்பென்ஸ்-ஐ கொஞ்சம் எகிறவிட்டு பிறகு மீண்டும் படிக்கவும்)

2004.  கிட்டத்தட்ட எல்லா சிலிகான் வாலி கம்பெனிகளும் தங்கள் கிளைகளை பெங்களூர் போன்ற நகரங்களில் தீவிரமாக விரித்துக்கொண்டிருந்த காலம். நான் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனமும் அந்த வேலையில் இறங்கவே, பலரும் ஏறிய அந்த பஸ்ஸில் நானும் ஏறிவிடலாமென்று முடிவு செய்தேன். பெங்களுர் வந்துவிட்டால், அங்க இருந்து சென்னை இன்னொரு பஸ். அவ்வளவுதான். அதற்குப்பின் கலைதான். கனவுதான்.

2005. கட் பண்ணினால், பெங்களுர் நகரம். திரும்பிய இடங்களெல்லாம் கட்டுமானப்பணிகள். இரவு பகலாய் எல்லா இடத்திலும் ஏதோ ஒன்றைக் கட்டிக்கொண்டே இருந்தார்கள். சாலைகளை எல்லாம் தோண்டி தொறவு எடுத்து, மேம்பாலங்களை அமைத்துக்கொண்டிருந்தார்கள். மேம்பாலப்பணிகள் முடிந்தால், போக்குவரத்து நெரிசல் குறைந்து பெங்களூர் எங்களூர் என்று மார்தட்டலாம் என்று நினைப்பில் மண் விழுந்தது.  நெரிசல், மேம்பாலம் கட்டும் முன்னரும் பின்னரும் அதே கடுமையிலேதான் இருந்தது. முன்பெல்லாம், கீழே நெரிசல் இருக்கும். இப்போ, கீழும் நிக்கிறோம், மேலும் நிக்கிறோம். ஐ.டி. அலுவலகங்கள் எல்லாம் கட்டுமானம் முடிந்து ஈரம் காய்வதற்குள், அது வாடகைக்கு விடப்பட்டு,  ஐ.டி. ஊழியர்கள் உட்புகுந்து சாப்ட்வேர் கட்டுமானங்களை தொடங்குவார்கள்.

இரண்டு  ஆண்டுகள் பெங்களூர் நெரிசலில் மகிழ்ந்து குலாவிய பின், கலைத்தாகம் மறுபடி நாக்கைப்புரட்டவே, சென்னைக்கு ஜாகை மாற்றினேன்.  வேலைய வைத்துக்கொண்டே  பண்ணலாம் என்கிற மமிடில் கிளாஸ் சித்தாந்தத்தின் வழியில், கையில் அமேசான் வேலையும், நெஞ்சில் கலைக்கனவுகளுமாக, கல்லூரி நாட்களுக்குப்பின் எட்டு ஆண்டுகள் கழித்து சென்னைக்கு திரும்பிவந்தது ஏதோ ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது.  இதுதான் தருணம் என்று கலைத்துறைக்கான ஆயத்தப்பணிகளை ஆரம்பித்தபோது, அந்தப் பெரிய மாற்றம் நடந்தது.  (ஆனால் இது அவ்வளவு பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் இல்லை. நீங்கள் எதிர் பார்ப்பதுதான். அதனால், இடைவேளி எடுக்காமல் தொடர்ந்து படிக்கவும்).

கலைத்துறையில் காலடி எடுத்துவைக்க வலது காலை நான் தூக்கிப்பார்த்தால் காலைத்தூக்கவே முடியவில்லை. யெஸ். கால் கட்டுப்போடப்பட்டுவிட்டது. மேரேஜ் ஆயிருச்சு ப்ரோ! கண் மூடி கண் திருந்தால், எட்டு ஆண்டுகள் ஒடவிட்டன.  (பின்வரும் வரிகளைப் படிககும்போது, பின்னிசையாக அவ்வை ஷண்முகியின்  'வேலை வேலை' என்ற பாடலை மண்டையில் ஓட்டிக்கொள்ளவும்.) அமேசானில் வேலை. கட் பண்ணினா, வீடு குடும்பம். கட் பண்ணினா வேலை. கட் பண்ணினால் முதல் குழந்தை டெலிவரி. கட் பண்ணினா வேலையில் ஒரு ப்ரமோஷன். கட் பண்ணினால் இரண்டாவது குழந்தை டெலிவரி. இதற்கிடையில் அவ்வப்போது எனக்கு பிறந்த நாள் வரும்.   30வது பிறந்த நாளிலிருந்து..ஒவ்வொன்றாக வந்து 39 வது பிறந்த நாளுக்கு பிள்ளைகளோடு கேக் வெட்டும் போது 'வேலை வேலை' பாடல் முடிகிறது.

39. வயது. இது ஒரு சாதாரண எண் அல்ல. 29 மாதிரி அதை அவ்வளவு எளிதாக நீங்கள் கடந்து வந்து விட முடியாது. 40 க்கு முன்னால் வரும் ஒரு தீர்க்கமான செக் போஸ்ட் தான் இந்த 39. எந்த தைரியத்தில் நீ 40 வரைக்கும் வந்தாய் என்று மிரட்டும்.  'இடைவேளை வந்துவிட்டது, ஆனால், உன் கதையை நீ ஆரம்பித்தமாதிரியே தெரியவில்லையே' என்பது போன்ற அசரீரி எல்லாம் ரீ-ரெக்கார்டிங்க் பின்னிசையோடு சேர்ந்து ஒலிக்கும்.

சித்திரம் பேசுதடி  பாடலில், எனக்கு மிகப்பிடித்த வரிகள்: "என் மனம் நீ அறிவாய்..உந்தன் எண்ணமும் நான் அறிவேன்"  அந்த சித்திரம் போல் துணை கிடைத்துவிட்டால் உங்கள் வாழ்க்கை சுலபம்.  என் மன ஓட்டங்களை அறிந்தவளாய், ஒரு நாள், என் மனைவி "பதினைந்து ஆண்டுகள் வேலை செய்துவிட்டாய். ஒரு ஆண்டு ப்ரேக் எடுத்துக்கோண்டு இஷ்டமான விஷயங்களைச் செய்துவிட்டு, பிறகு மீண்டும் விட்ட இடத்திலேர்ந்து பிடிச்சிக்கலாமே", என்று ஒரு பிட் போட்டாள். அதை கப்பென்று பிடித்துக்கொண்டேன். அங்கு தொடங்கிய உரையாடல், "ஒரு வருடம் போதாது. மூன்று வருடங்கள் வேண்டும் உருப்படியா ஒரு விஷயம் செய்யணும்னா.  சேமிப்பில் குடும்பத்தை சமாளிப்போம். மூன்று ஆண்டுகளுக்குக் கலைத்துறையை முயற்சி செய்வோம். வந்தால் மலை. போனால்...  கலை",  என்ற சூளுரையோடு ஒரு நவம்பர் மாதத்தில் 15-வருட கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டேன். இதோ, கடந்த நவம்பரோடு மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன. ஸ்டாண்டப் காமெடியன் என்ற அடைமொழியோடு இதோ அமெரிக்காவரை வந்துவிட்டேன்.

இப்போது கதைக்கு ஒரு முக்கியமான ப்ளாஷ்பேக் உண்டு. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தது. தமிழ் மீடியத்தில் படித்தது. பால்ய வயதுகளில்  இசை வார்த்த, சர்ச் மற்றும் அம்மன் கோவில் ரேடியொக்களில் ஒலித்தபாடல்கள் என்று சுவாரஸ்யமான ப்ளாஷ்பேக்.  (நேரமின்மயான ப்ளாஷ்பேக் விரிவுரை இங்கே இடம்பெறவில்லை).

ஆக, இந்தக் கதையை அடி நாதமாகக்கொண்டு , தனிக்குரல் நகைச்சுவை (ஸ்டாண்டப் காமெடி)யும், என்னை உங்களை வளர்த்தெடுத்த  தமிழ் திரைஇசை பாடல்களும், கலந்தொலிக்க, நமது வாழ்க்கை, நகைப்பும், நல்லிசையும் போல் அற்புதமான விஷயங்களால் நிறைந்திருக்கிறது என்று நமக்கே நினைவூட்டும் நிகழ்ச்சிதான் 'அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்'.

தில்லானா கலை இரவுகளிலும், தமிழ் மன்ற மேடைகளிலும், நாடக் நாடக அரங்குகளிலும்,  லோட்டஸ் மேடையிலும் எனது கலையார்வ முயற்சிகளுக்கெல்லாம் கைதட்டி உரமூட்டிய நல் மனத்தோர்க்கு இந்த 'அலெக்ஸ் ஒண்டர்லேண்ட்' ன் அமெரிக்க சுற்றுப்பயணம் சமர்ப்பணம். ஆன்லைன் பொழுதுபோக்குகள் பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில், டிக்கெட் வாங்கி பார்த்து நிகழ்த்து கலை (live performing arts) நிகழ்வுகளுக்கு ஆதரவு தந்து ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.  எல்லாரும் குடும்பத்தோடு வாங்க. 10க்கு மேல் குழந்தைகளும் வரலாம். அனைவரையும் அலெக்ஸின் அற்புத உலகில் சந்திக்க ஆவல்!

Alex in Wonderland சுற்றுப்பயணம் பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 8 வரை, அமெரிக்காவில் 18 நகரங்களில் நடக்கவிருக்கிறது.  சுற்றுப்பயண கால அட்டவணை மற்றும் டிக்கெட்டுகளுக்கு -  www.AlexInWonderland.in. நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் பதிவிட www.facebook.com/ilikeslander/reviews. சுற்றுப்பயண மேலாண்மை: US - aiwusa2018@gmai.com;  India - est@evam.in; அலெக்ஸை தொடர்பு கொள்ள - FB: @ilikeslander, team@alexanderthecomic.com & youtube.com/AlexanderTheComic


1. What inspired you to take up Stand-up comedy and when and where was your first dig at this
(date, venue/forum)

சாலமன் பாப்பையா ஒரு வகையில் தனிக்குரல் நகைச்சுவை (Standup comedy) ஐ அடையாளம் காட்டியவர்களில் முக்கியமானவர்.  பாப்பையா எவ்வளவு ஆழமான விஷயங்களைப் பேசினாலும், கேட்போர் களைப்புறாதிருக்க நகைப்பைத் தூவிக்கொண்டேயிருப்பார். உணர்வுப்பூர்வமாக உரையாடுவார். அதுபோல மேடையில் பேச சிறுவயதிலேயே ஆசை கொண்டேன்.

பிறகு, Jerry Seinfeld, Robin Williams, Jim Carrey இவர்களின் காணொளிகள் கண்டபோது, அவர்களின் இயல்பான மொழியும், நுட்பமான கண்ணோட்டமும், நாடகத்திறனும் பிரம்மிக்கவைத்தன. பிறகும் S Aravind, Karthik Kumar, Aswin Rao இவர்கள் ஏவம் குழுவில் English Standup நடத்தியதைப்பார்த்த போது, அதற்கான களம் இருப்பதைக்கண்டேன்.

ஏவம் குழுவில் முதலில் 2013 டிசம்பரில் முதன்முதலாக ஒரு கள்ளகத்தில் (Pub) முதல் நிகழ்ச்சி. இப்போது மூன்றரை ஆண்டுகள் கழித்து 200 வது நிகழ்ச்சியை நோக்கி பயணம் தொடர்கிறது.

2. Who are/were your role models in music and standup comedy?

எப்போதும் முணுமுணுத்துக்கொண்டிருப்பது பெரும்பாலும் இளையராஜாவின் பாட்டாகவே இருக்கும். எம்.எஸ்.வி இசையின் மேல் தீவிர இரசனை கொண்ட என் அப்பாவிடமிருந்து அந்த தீவிரம் எனக்கும் தொற்றிக்கொண்டது.  எளிமையின் வலிமையை நினைவூட்டுபவை எம்.எஸ்.வியின் பாடல்கள்.  ரகுமானிடம் பிடித்தது ஒரு மெட்டை பல்வேறு இரசனையுள்ளோர்க்கும் கொண்டுசெல்ல ஒவ்வொரு பாட்டுக்கும் அவர் காட்டும் நேர்த்தி. இந்த இசை ஆளுமைகள் என் ஆதர்சங்கள்.

தனிக்குரல் நகைச்சுவையில்,  ஜார்ஜ் கார்லின், ராபின் வில்லியம்ஸ், ஜிம் காரி பிரம்மிப்புட்டுபவர்கள்.


3. Stand-up comedy is fast evolving as an entertainment in India. Your thoughts and your distinguishing/unique aspects that you bring to this entertainment form.

எந்த ஒரு படைப்பாளியையும் அடையாளம் காட்டுவது Uniqueness எனப்படும் அந்த தனித்தன்மைதான். இந்த தனித்தன்மை இயற்கையிலேயே படைப்பிலேயே ஒவ்வொரு உயிருக்கும் அளிக்கப்படிருக்கிறது என்று நம்புகிறேன்.  அந்த தனித்தன்மையோடு நேர்மையாக வாழ்க்கையைப்பிரதிபலித்தால் அந்தப் படைப்புக்கு வசீகரம் வந்துவிடுகிறது.  எனது பின்னணியும், இசையும், வாழ்க்கையை பண்போடு எதிர்கொள்ள வேண்டும் என்ற நேர்மறைச்சிந்தனையும், ஆன்மீக ஆர்வமும், எனது அடையாளத்தை செதுக்குவதாக உணர்கிறேன்.

#4. It is not uncommon to find use of vulgarity (in words and sequences) in Comedy and also negativity with respect to certain types of people/community. Share your thoughts on your guiding philosophy

நாம் இயல்பு வாழ்க்கையில் இயற்கையாக ஒருவரோடு ஒருவர் எப்படி உரையாடுகிறோமோ அதை அப்படியே மேடையில் செய்கிறபோது கலைஞனுக்கும் கேட்போருக்கும் ஏற்படுகிற நெருக்கம், இறுக்கம் தளர்த்தி நகைச்சுவைக்கு நம்மை தயராக்குகிறது. இறுக்கம் தளர்ந்தாலொழிய சிரித்தல் கடினம்.  சில கலைஞர்கள் வசைச்சுற்கள் பயன்படுத்தக்காரணம் இந்த இயல்புச்சூழலை உண்டாகுவதற்காகவே.  இதில் சிக்கல் என்னவென்றால, இந்த இயல்பு இயற்கையெல்லம் நம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.  எல்லோருக்கும் ஏற்புடைய இயல்பான ஒரு பேசுமொழியை கண்டுபிடிப்பது கடினம்.   வசவு சொற்கள் இருப்பதால் மட்டுமே ஒரு படைப்பு கீழானது என்றோ, வசவில்லாத ஒரு காரணத்திற்காக மட்டுமே அதை மேலானதென்றோ நாம் சொல்லிவிட மாட்டோம். வாழ்க்கையை நுட்பமாக,  தீர்க்கமான இரசனையோடு வெளிக்கொணர்வதே ஒரு படைப்பின் உயரத்தை நிர்ணயிக்கிறதென்று நினைக்கிறேன்.

நான் இயல்பிலேயே வசைச்சொற்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை என்பதால், அது என் நகைச்சுவையிலும் குறைவாக வெளிப்படுகிறது. குழந்தைகள் பலரும் எனது நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள் என்பதாலும் வசைச்சொற்களைத் தவிர்க்கிறேன்.


#5. Your most memorable compliment that you heard from an audience member (listener)

"ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இவ்வளவு சிரிச்சிருக்கேன்பா"
"You are a saviour"
"You are a blessing to all of us"

என்பது போன்ற நெகிழ்வான பல பதிவுகள் facebook.com/ilikeslander/reviews இருக்கு.

Comments

I AM~~ ME said…
Wish you all the best for your shows in the US! Eagerly looking forward to your show!
Unknown said…
Loved the write-up. Wishing you a world full of fans and so much success!

-Revathi
Hi Alex, come to LA. TSLA will sponsor you. Connect with me with my name below at gmail dot com!
Unknown said…
Alex, Jaya Bharathi ennakaga super ah ennaku Whatsapp Le annupi irrukanga. One no tech with another super IT technician are figuring it out as how to upload it on FB
Unknown said…
Alexu..... Sooparapoo...... Need jayichite..... Vazhga vazhamudan men melum....
YouTube-ல் பார்த்த உடனே உங்களைப் பிடித்துப்போய்விட்டது. ஜூலையில் உங்கள் நிகழ்ச்சியை நேரில் பார்க்கவேண்டும், அப்பொழுது சில நிமிடங்கள் சந்திக்கவும் ஆசை..!

Alex in Wonderland வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
Unknown said…
upload more vidoes in youtube please
Unknown said…
��. Esply liked ur answer to question #4. Diplomatic jalli adiyaa illaama, oru honest reply. Saga comedians'sa vittu kudukkaama oru badhil. ����. Good luck with the tour. Uncle Sam must be very very happy to hv u back.

Popular Posts