பிரான்சிஸ் தாத்தா


Our home that was, in Andavoorani
நான் ஜிரம் வந்து படுக்கும்போதெல்லாம் என்னுள் வந்து போகின்ற முகம் என் தாத்தாவுடையது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுவார் வள்ளலார்; வாடிய பேரனை/பேத்தியைக் கண்டு கண்டு தானும் வாடுவார் என் பிரான்சிஸ் தாத்தா. நிமிடத்திற்கொருமுறை தொட்டு தொட்டுப் பார்த்து, ஜிரம் குறைகிறதா என்று பார்த்துக்கொண்டேயிருப்பார். இரவு பகலாய் முழித்துக்கொண்டே பாயின் அருகே உட்கார்ந்திருப்பார். இரவு எப்போ முழித்தாலும், உடனே 'ஒன்னுக்கு வருதாடா?' என்று கேட்டு தெருவுக்கு கூட்டிச்செல்வார்.
ரஸ்கு ரொட்டி-வரக் காப்பி என்ற அமிழ்தினும் இனிய(?) உணவுதான் ஆண்டாவூரனி வீட்டில் காய்ச்சலுக்கான பத்திய உணவு. அப்படி இப்படி அடம் பிடித்து அழுது காட்டி, இனிப்பு பண் (Bun)-னுக்கு upgrade செய்வது ஒவ்வொருத்தரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. கொஞ்சம் காய்ச்சல் இறங்கினால், வெள்ளைபூண்டு கஞ்சி பரிசாகக் கிடக்கும். நாட்கள் யுகங்களாய்க் கழிந்து, வெள்ளைப்பூண்டு கஞ்சியிலிருந்து, கரைத்துப் பிணைந்த இரசம்-சாதத்திற்கு promotion கிடக்கும் போது நம்பிக்கை நட்சத்திரம் ஒளிர்விடும். 'மழையில் நனையாமல், பனியில் போகாமல் வீட்டில் பேசாமல் இருந்துவிட்டால் இப்படியெல்லாம் வருமா?' என்ற கேள்வியை காய்ச்சல் சமயங்களில் அடிக்கடி சொல்லி மனதில் பதிய வைக்கவேண்டுமென்பது, தாத்தாவின் விடாமுயற்சியாக இருக்கும். வேனல் காலத்தில் கூட, சாயாந்திரங்களில், தலையை காதை இறுக்கி மூடிக்கொண்டால்தான் சளிபிடிக்காது என்பதை பைபில் வசனமாக, தாத்தா போதித்துக்கொண்டிருப்பார். பனி குல்லா வைக்கலாம், ஆனால் மஃப்ளர் போட்டு தலையை மூடுவது ஆண்மகனுக்கு அழகா என்ற கேள்வி மனதில் எழும். ஆனால், தலையை மூடாமல் அலைவதை பார்த்தால், வீட்டுக்கு வந்தபின் பூசை நடக்கும்.

Back to தாத்தா! எனக்கு 4 வயது நடக்கும் போதே என் அம்மாச்சி இறந்துவிட்டார். ஆண்டாவூரனியில் தற்போதும் கூட, எங்கள் வீடு 'அம்மாச்சி வீடு' என்று அழைக்கப்படும் அளவுக்கு, அம்மாச்சி செங்கோலாய்ச்சி இருந்துவந்ததை இன்று அறிகிறேன். அம்மாச்சி தாத்தாவை விட ஒரு சில வயது அதிகமுடையவர் என்று அம்மா சொன்னதாய் நினைவு. ஆண்டாவுரனி கிராமத்தில், இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு காதல் திருமணம் என்பதே அபூர்வமானதாய் இருந்திருக்கும்; அதிலும் இரு வேறு ஜாதிகள் கலப்பது? அதுவும் ஊரை விட்டு ஓடிப்போய் வட நாட்டில் வாழ்ந்து பின் கிராமத்துக்கு வருவது? --- அம்மாச்சியும் தாத்தாவும் இது எல்லாத்தையும் செய்த்தோடு, மீண்டும் வந்து, கிராமத்தில் ஒரு பெரிய குடும்பம் என்ற கௌரவத்தையும் உழைத்து சேர்த்தவர்கள்.

என் தாத்தா ஒரு கலைஞர் தாத்தா! ஆம், ஆர்மோனியப் பெட்டியை எங்கள் வீட்டுக்குள் கொண்டு வந்து இசையை இணைத்துவிட்டவர். மேடை நாடகங்கள் எழுதி, ஊர் ஊரார் சென்று நடத்தி, நடித்து, நாடகத் தமிழையும் எங்கள் இரத்தங்களுக்குள் என்றோ பாய்ச்சி விட்டவர். எங்களுக்கு விபரம் தெரியும் முன்பே, தாத்தா தன் முதுமைக்கு வழிவிட்டு தன் கலைப் பயணத்தை நிறுத்திக் கொண்டாலும், என் அப்பாவுக்கு ஆர்மோனியத்தோடு, கலை ஆர்வத்தையும் தன்னையும் அறியாமல் தந்திருக்க வேண்டும். கோயில், Choir என்று , கடவுள் பாடு பொருளாக அமைந்தார். பள்ளிகள் அரங்கேற்ற மேடைகளாயின. குடும்பத்தில் இசை, நாடகம் தொடர்ந்தது, ஏதோ ஒரு வடிவில்.





தாத்தாவை கடைசி காலத்தில் நன்கு கவனிக்க வேண்டுமென்பதெற்காகவே, உயர் நிலைப்பள்ளி வேலையை வேண்டாமென்று சொல்லி, வீட்டிலிருந்து கூப்பிடு தொலைவிலுல்ள தொடக்கப் பள்ளியிலேயே பணி தொடர்ந்தார் என் அம்மா. அம்மாவும் அப்பாவும் தங்கள் பங்குக்கு திருமணத்தில் ஒரு தனித்தன்மையை நிறுவியிருந்தார்கள். அவ்வப்போது தகராறு செய்ய ஏதுவாய், வடக்கூர்-தெற்கூர் என்று இன்றும் ஆண்டாவுரனி பிரிந்து நிற்பதைக் காணலாம். வேவ்வேறு ஊரணிகள், கோயில்கள் (Churches), கோவில்கள் (Temples), சேரிகள் என்று எல்லாம் தனித்தனி. சுமுகமா எல்லாரும் போகலாம் வரலாம்; பொண்ணு கொடுக்கலாம் எடுக்காலாம். ஆனால் இரு ஊருக்கும் பிரச்சனை என்று வந்தவுடன் மட்டும், தனித்தனியே பிரிந்து அடுத்தவன் குடியை எப்படி அழிப்பது என்று தீவிரமாய் யோசிக்க வேண்டும் - இதுதான் ஆண்டாவுரனியின் எழுதப்படாத ஊர்க் கட்டுப்பாடு.

இந்தப் பின்னணியில், வடக்கூரை சேர்ந்த அப்பா, தெற்கூரைச் சேர்ந்த என் அம்மாவை திருமணம் செய்தார். பெரியம்மா, கன்னியாஸ்திரி ஆகிவிட, வீட்டோடு மாப்பிள்ளையாகி தெற்கூருக்கு வந்தார் அப்பா. வடக்கூரிலும் நில புலங்கள் இருந்ததால் அங்கும் குடியுரிமை இருந்ததது. உரிமையோடு உபத்திரவவும் இருந்தது. பிரச்சனைகளின் போது அப்பா எப்பக்கம் சார்வது என்பது குழப்பமான கேள்வி. எந்த நிலைப்பாடும் தவறான நிலைப்பாடுதான்.

நான் அறிந்த வரையில், அப்பா தாத்தாவுக்கு ஒரு மகனாகவே இருந்து கவனித்தார். பெரியவர்களை அக்கரையுடன் கவனிப்பதை அம்மாவும் அப்பாவும் எங்கள் எல்லாருக்கும் செயலில் காட்டி மனதில் பதித்தார்கள். வெவ்வேறு கால சூழ்நிலைகளால், அப்பா பக்கத்து உறவுகள், எங்கள் குடும்பத்தில் கலக்கா வண்ணம் என் அம்மா போரிட்டு வந்தார். இருந்தாலும், அப்பா இதை தாத்தாவின் மேல் காட்டியதாய் எனக்கு நினைவில்லை.

நடந்து கொண்டுருப்பவர்கள் எப்படி திடீரென்று வாதம் வந்து படுத்த படுக்கையாகிறார்கள், என்ற கேள்வி நான் சிறுவயதில் யோசித்த கேள்விகளில் ஒன்று. என் அம்மாச்சி, இறுதி வருடங்களை் வாதமுற்று படுக்கையில் கழித்தார்கள். தாத்தாவிற்கு வாதம் வருவதற்கு ஒரு தருணம் குறிக்கப்பட்டுவிட்டது. பள்ளியில், இராமேஸ்வரம் சுற்றுலா ஏற்பாடாகி இருந்தது. அதிகாலை 4 மணிக்கு பஸ் கிளம்பும்; இராமேஸ்வரம் சுற்றியபின் அன்று இரவே நாங்கள் வீடு திரும்புவோம்; இதுதான் திட்டம். வழக்கமாய், தாத்தாவை கவனிக்க வேண்டுமென்பதையும், பஸ் ஒத்துக்கொள்ளாது என்பதையும் காரணம் காட்டி, எங்கும் கிளம்பாத என் அம்மா, என் பிடிவாதத்தால் இராமேஸ்வரத்திற்கு தயாரானார்கள். இரவு வந்தது. சுற்றுலாவிற்கு ரெடியாகிவிட்டோம். காலையில் எழுந்து 5 மணிக்கு பள்ளிக்கூடம் சென்று பஸ் ஏற வேண்டும். எப்போது காலை வரும் என்று தூங்காமேலேயே கிடந்து பின் காலை 4 மணியும் வந்தது. கூடவே ஒரு சின்ன அதிர்ச்சியும் வந்தது. எழுந்து பார்த்தபோது, என் உடலெல்லாம் பூச்சி கடித்த தடிப்புகள். இது தெரிந்தால் இராமேஸ்வரம் அம்போ ஆகி விடுமென்று பயந்து, கடுமையான அறிப்பையும் சொறியாமல் போராடிக்கொண்டிருந்தேன். அம்மா பார்த்ததும், தடிப்போடு சுற்றுலா வேண்டாம் என்று கெஞ்ச, நான் துக்கத்தின் உயரத்தில் அழ, 'அவில்' மாத்திரையைப் போட்டுக்கொண்டு போவது என்று முடிவாயிற்று. தாத்தாவுக்குத் துணையாக வீட்டில் அப்பா. அம்மாவும் நானும் இராமேஸ்வரம் கிளம்பிய ஒரு மணி நேரத்திலேயே, பாத்ரூம் செல்ல முடிவு செய்தார் தாத்தா. ஆண்டாவுரனி வீட்டின் பாத்ரூமைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஊரிலேயே பாத்ரூம் வசதி கொண்ட இரண்டு அல்லது மூன்று வீடுகளில், எங்கள் வீட்டுக்கு முதலிடம். ஆனால், வீட்டுக்கு வெளியே பூட்டு போட்டு 'கக்கூஸ்' என்ற கௌரவப் பெயருடன் விளங்கும் அறைக்கு, தாத்தா இருட்டில் சென்றிருக்க வேண்டாம்தான். இருந்தாலும், இரவுகளில் பயன்படுத்த வைத்திருக்கும் 'Manual Toilet Bowl' அ பயன்படுத்த்தினால், அம்மா இல்லாமல் சுத்தம் செய்வதும் சிரமம் என்று எண்ணி தாத்தா பின்புறம் பாத்ரூமுக்கு போயிருக்கிறார். Indian Style Toilet ல் அமர்ந்தவர் எழுந்திருக்க முடியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து அப்பா தேடிப் பார்த்து, பாத்ரூமில் முனகிக் கொண்டு கிடந்த தாத்தாவை தூக்கிக் கொண்டுவந்து படுக்கையில் கிடத்தினார்கள். அன்று அதிகாலை பாத்ரூமுக்கு நடந்ததுதான் தாத்தாவின் கடைசி நடை. இராமேஸ்வரத்திலிருந்து தடிப்புகள் நீங்கி, நானும் அம்மாவும் இரவு வீட்டுக்கு வந்து தாத்தாவையும், முட வைத்தியர் தைலம் தேய்த்துக்கொண்டிருப்பதையும், அண்டை வீட்டார் கூட்டத்தையும் பார்த்து அதிர்ந்தோம். 'இதற்குத் தானே நான் எங்கிட்டும் போ மாட்டேன்னு சொன்னேன்' என்ன அம்மா அழுதும் பயனில்லை. தாத்தா வாதத்தில் அடுத்த 6-7 ஆண்டுகளைக் கழித்தார்.


வாதமுற்ற நிலையில், தாத்தா ஒரு குழந்தையானார். எல்லாவற்றிற்கும் உதவி தேவை. முன் வீட்டில் படுக்கையில் இருந்தார் தாத்தா. நாங்கள் காபிக்கும் உணவுக்கும் கிச்சனில் கூடினால், அவர் விரைவில் பொறுமை இழந்து முன் வீட்டில் கொஞ்சம் action நடக்க வேண்டுமென்று விரும்புவார். குழந்தையாய் கோபிப்பார், சண்டையிடுவார். அம்மாவும், அப்பாவும், பொறுமையோடு வயதானவர்களைப் பாத்துக்கொள்வதை செயலில் இன்னும் கடினமாய் உழைத்து காட்டினார்கள்.

வீட்டில் நான் கடைசிப் பிள்ளை; ஒவ்வொருத்தராய் middle-school ஐ தாண்டி High school க்கு Hostel களை நோக்கி தேவகோட்டைக்கும் மதுரைக்கும், திருச்சிக்கும் பறந்தார்கள். நான் மட்டும்தான் வீட்டில். தாத்தாவும், நானும் இன்னும் நெருக்கமானோம். 'தாத்தா ஒரு சரியான தொன தொன', 'சும்மா உயிரை வாங்கிறார்' என்பதையெல்லாம் தாண்டி அன்பைக் காட்டுவதிலும் தாத்தா தனித்து நின்றார். கடைசியில் நானும் Middle schoolஐ முடிக்க, எனக்கும் பறக்கும் நேரம் வந்தது. Oriyur Hostel ல் சேர்க்கப்பட்டேன். ஒவ்வொரு முறை Hostel க்குப் புறப்படும்போதும், 'பத்திரமாய் இருடா; ஒருவேளை நீ திரும்ப வருவதற்குள் நான் போய் விட்டால், வேண்டிக்கொள்' என்று சொல்லி ஒவ்வொருதடவையும் அழுவார்; அழுகை மூட்டுவார். உள்ளத்து அன்பையெல்லாம் முகத்தில் தேக்கி, எனக்கு சிலுவையிட்டு ஆசிர்வதிப்பார். தாத்தாவின் மேலிருக்கும் சிறு சிறு வெறுப்பெல்லாம் ஓடி மறைந்து அவருக்காக வேண்டிக்கொள்ள மட்டுமே தோன்றும்.


கடைசியில் அந்த தருணமும் வந்தது. "
ஒருவேளை நீ திரும்ப வருவதற்குள் .. " என்று அந்த முறையும் என்ன சொல்லி அனுப்பியது, 10ம் வகுப்பு தேர்வு முடிந்த கோடை விடுமுறையில், நான் சலேசிய சபையில் சேர்வதற்கான, 15 நாள் Selection Camp க்காக. ஊரிலிருந்து 8 மணி நேர Bus தொலைவில் வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரிலிருந்தேன். 16 நாட்களுக்குப் பிறகு, ஊரில் வந்து இறங்கிய போதே, பக்கத்து வீட்டுப் பையன், 'தாத்தா விஷயம் தெரியாதுல்லடா?; சரி சரி வீட்டுக்குப் போ; சொல்லுவாங்க' என்று சொல்லியதில் கலங்கியபடியே வீடு சென்றேன். முன் வீட்டில் தாத்தா இல்லை. அவரது படுக்கையே இல்லை, பின் எங்கிருந்து தாத்தா? கிச்சனிலிருந்து ஓடி வந்து அம்மா என்னைக் கட்டிக் கொள்ள, அழுது முடித்தோம். நான் கிளம்பிய மூன்றாவது நாளே தாத்தாவும் கிளம்பிவிட்டாராம். தாத்தாவின் உயிரற்ற உடல், அழுகை, கூட்டம் எல்லாம் பார்ப்பதை விட இதுவே சிறந்தது என்று அப்போது தோன்றியது. ஆனால் 18 ஆண்டுகளுக்குப் பின் இன்று, தாத்தா உயிர் பிரியும் போது பக்கத்தில் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

பிரான்சிஸ் தாத்தா அவ்வப்போது கனவுகளில் நினைவுகளில் தன் பாவமான முகத்தோடு தோன்றி மறைவார். அவரின் ஆர்மோனிய பெட்டியை நான் கைவசம் கொண்டுருக்கிறேன். அந்த ஆர்மோனியத்துடன் பாடினால், ஏதோ கூடுதல் இனிமை இருப்பதாய் நான் உணர்வதுண்டு.

Comments

Unknown said…
( Wanted to post my reply in Tamil, but don't know how to write and post in Tamil)
Dear Babu,

Great start! I think you got the art of writing a blog. I like the way you have written about the fever stuff - didn't left any trivial thing.
I know your grandpa but didn't know all these..... My memories were gone back to my childhood days when I read this blog. Then.. About that tour... I think we also join you guys from our school. I remember that my school Head Master told me, "See this guy, you are going to compete with him when you join Andavoorani school"..That's when I know/heard you for the first time.
But, I thought it was a trip where we all went to Madurai tour.I might be wrong...

I request you to write a blog (full comedy) about our people - our people language (slang) - vetti peechu :-) with your own style.I love to hear that from you.I think you know what I am requesting from you...

Cheers
Palani
Kavi Sai said…
Very Nicely written.....Very glad to see the writer in you jump back to life...looking fwd to more of your blogs......
Sumitha said…
felt like reading a touching short story!

Popular Posts